Saturday 1 August 2020

மரசெக்கு எண்ணெய் - chekku oil - pure oil

செக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே!

`வை த்தியருக்குக் கொடுப்பதை வணிகருக்குக் கொடு' என்பது பழமொழி. அந்நாள்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்ததற்காகச் சொல்லப்பட்ட பழமொழிதான் இது. கண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி, நோய்வாய்ப்பட்டு மருத்துவருக்குக் காசு செலவழிப்பதைவிட, வணிகருக்குக் கொடுத்துவிடலாம் என்பது இதன் அர்த்தம். முன்னர், கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிட்டு வீட்டு உபயோகத்திற்குப் போக மீதமிருப்பதை மரச்செக்குகளில் ஆட்டி செக்கு எண்ணெய்யாக விற்பனை செய்வார்கள் அல்லது வீட்டு உபயோகங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரச்செக்கு வழக்கில் இருந்தது. அப்போது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி செக்கில் அரைத்து எண்ணெய்யாக நேரடியாக மாற்றிக் கொள்வர். நவீன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வந்த பின்னர், செக்குகள் பக்கம் மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர். அதன் விளைவு, மரச்செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வு காரணமாக மீண்டும் மரச்செக்கை நாட ஆரம்பித்திருக்கிறோம்.

மரச்செக்கு ‘செக்கு' எண்ணெய் வேண்டும் என்று பலரும் வாங்கி உபயோகித்து வருகிறார்கள். அவை அனைத்தும் உண்மையான செக்கு எண்ணெய்யா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். செக்கு எண்ணெய் என்பதற்கும் மரச்செக்கு எண்ணெய்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.
செக்கில் இரும்புச் செக்கு, மரச்செக்கு என இரு வகைகள் உண்டு. இரும்புச் செக்கை ரோட்டரி என்றும் சொல்வர். இரும்புச் செக்கு முழுமையாக இரும்பில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் திறன் 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும். அதனால் சுமார் 300 டிகிரி வெப்பத்தில் அரைக்கும். 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும் மோட்டார் மூலம், செக்கின் உலக்கைப் பகுதி ஒரு நிமிடத்திற்கு 34 முதல் 36 சுற்றுகள் சுற்றும். இந்த வேகமும், அதிகமான வெப்பநிலையும் அரைக்கும் தானியத்தின் உயிர்த் தன்மையை நிச்சயமாகப் பாதிக்கும். இதையும் பலர் செக்கு எண்ணெய் என்று வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு முழுச் சத்துகளையும் கொடுக்க முடியாது. ஆனால் கலப்பட எண்ணெய்களிலிருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழிதான். பலர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரச்செக்கின் கீழ்ப்பகுதியும், உலக்கையும் நிச்சயமாக மரங்களில் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 3 எச்.பி திறன் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இச்செக்கின் உலக்கை ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள் வரை சுற்றும். இதனால் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் உருவாகும். அதனால், இந்த எண்ணெய்யில் உயிர்ச் சத்துகள் ஒருபோதும் அதன் தன்மையை இழக்காது. இது முழுமையாக நமது உடலுக்கும், உயிருக்கும் முழுயான நன்மை கிடைக்கும்.

ரோட்டரி செக்கு எண்ணெய்களோடு ஒப்பிடும்போது மரச்செக்கு எண்ணெய் விலை கொஞ்சம் அதிகம்தான். உடலுக்குத் தகுந்த எண்ணெய் உருவாக்க, பக்குவம், நேரம், செலவு சற்றுக் கூடுதலாகத்தான் ஆகும். எண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளை உருவாக்க முன்னர் சொன்ன மூன்றுமே தேவையில்லை. சரியில்லாத உணவை எடுத்துக்கொண்டு கொழுப்பு ஏறி, மருத்துவரிடம் சென்று மாத்திரை, மருந்து இவற்றிற்குச் செலவு செய்வதை விட, மரச்செக்கு எண்ணெய்க்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்கினால் தவறில்லை என்பதை உணர மறுக்கிறோம். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பயிர்களைக் காய வைத்து, கல், தூசு நீக்கியே மரச் செக்கில் ஆட்டப்படுகிறது. கற்களை நீக்காமல் ஆட்டினால் மரத்தால் ஆன உலக்கையும், அடிப்பாகமும் சேதமாகும். ஆனால் ரோட்டரி செக்குகள் முழுவதும் இரும்பால் ஆனதால் கல் இருந்தாலும் கவலையில்லை. சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யா என உறுதி செய்து கொள்ள, எண்ணெய் பாட்டில் வாங்கும்போது அதைத் தலைகீழாக ஒரு முறை திருப்பிப் பார்க்கலாம். கறுப்பாக கசடுத் துகள்கள் தென்படும். அப்போது அதை உண்மையான செக்கு என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய்யைக் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். அப்போது ஏற்படாத கொழுப்புச் சத்து ஏன் இப்போது ஏற்படுகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. காரணம், அவர்கள் பயன்படுத்தியது மரச்செக்கு எண்ணெய். உடலுக்கு நன்மை தரும் பல பாரம்பர்ய முறைகளைக் கைவிட்டு இருக்கும் தற்போதைய சூழலில், மரச்செக்கு எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டால், இப்போது இருக்கும் மரச்செக்குகளாவது அழியாமல் பாதுகாக்கப்படும்.

Thanks to: https://www.vikatan.com/literature/environment/144597-there-is-a-difference-between-normal-oil-press-oil-and-wooden-oil-press-oil

#Groundnutoil #Coconutoil #Sesameoil #Marachekkuoil #coldpressed #

No comments:

Post a Comment